சென்னையில் Zydus Pinkathon ஓட்டப் போட்டி- 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக பங்கேற்பு
சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) பெண்களின் ஆரோக்கியம், உடற்தகுதி மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னை தீவுத்திடலில் ஜைடஸ் பிங்கத்தான் (Zydus Pinkathon) ஓட்டப் போட்டி நடைபெற்றது. நடிகர் மில்லின்ட் சோமன் மற்றும் இந்த
மாரத்தான்


சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

பெண்களின் ஆரோக்கியம், உடற்தகுதி மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னை தீவுத்திடலில் ஜைடஸ் பிங்கத்தான்

(Zydus Pinkathon) ஓட்டப் போட்டி நடைபெற்றது.

நடிகர் மில்லின்ட் சோமன் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை தலைமை இயக்குநர் மயங்க் ஶ்ரீ வத்ஸவா ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ. பிரிவுகளுடன், 50, 75 மற்றும் 100 கி.மீ. அல்ட்ரா தூர ஓட்டங்களும் நடைபெற்ற இந்த போட்டியில், 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

முதல் முறையாக ஓட்டத்தில் பங்கேற்ற பெண்கள், நீண்டதூர ஓட்ட வீராங்கனைகள், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளை சுமந்தபடி ஓடிய தாய்மார்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்று உடற்தகுதிக்கான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, புற்றுநோயாளிகளுக்கான செயற்கை சிகை தயாரிப்பதற்காக தலைமுடி தானம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பல பெண்கள் தலைமுடியை தானமாக வழங்கிய நிலையில், மேடையிலேயே நடிகர் மிலிந்த் சோமன் அவர்களின் தலைமுடியை வெட்டி தானத்தை பெற்றுக்கொண்டார்.

3 கி.மீ. பிரிவில் ஊக்கத் தூதர் ஜோஹா சனோஃபர் குழந்தையை சுமந்தபடி ஓடியது கவனம் பெற்றது.

5 கி.மீ. பிரிவில் புற்றுநோயிலிருந்து மீண்ட நந்திதா முரளிதர், 10 கி.மீ. பிரிவில் பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி வீராங்கனை எம். காயத்ரி, 50 கி.மீ. பிரிவில் 65 வயதான கீதா மணிச்சந்தர், 75 கி.மீ. பிரிவில் டெபோரா சுஷ்மா லால் மற்றும் 100 கி.மீ. பிரிவில் லதா ரவிச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய மிலிந்த் சோமன்,

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடைபெற்ற பிங்கத்தானுக்கு பெண்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், அனைத்து வயதினரும், அனைத்து பின்னணியினரும் பங்கேற்றது இந்த இயக்கத்தின் வெற்றியை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஜைடஸ் லைஃப்சயின்சஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பெண்கள் சுய மார்பகப் பரிசோதனையை வழக்கமாக மேற்கொண்டு மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.

மேலும், இன்விசிபில் விமன் நிறுவனத்தின் நிறுவனர் அங்கிதா கோன்வார், பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் இந்த நிகழ்வுக்கு சென்னை பெண்கள் அளித்துள்ள ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை தலைமை இயக்குநர் மயங்க் ஸ்ரீவஸ்தவ், பெண்களின் உடற்தகுதியை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு இந்திய விளையாட்டு ஆணையமும் ஃபிட் இந்தியா இயக்கமும் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P