தவெகவில் இணைய துடிக்கும் அந்த அரசியல் புள்ளி - பனையூர் போட்ட ஸ்கெட்ச்...!!
ஓ.பி. ரவீந்திரநாத் தவெகவில் இணைய முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வமும் இணைந்தால் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகன் இடையே அரசியல் அணுகுமுறையில் கருத்து வேறுப
TVK


சென்னை 02 ஆகஸ்ட் (ஹெச்.எஸ்)

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய பரபரப்புகளைச் சந்தித்து வருகிறது.

மாநில அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சி தாவல்கள் மற்றும் புதிய அரசியல் நகர்வுகள் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) குடும்பத்தைச் சுற்றியுள்ள அரசியல் விவகாரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, முன்னாள் தேனி மக்களவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வத்தின் மூத்த மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத், ஆளுங்கட்சியாக உள்ள தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் தனது நெருங்கிய ஆதரவாளர்கள் மூலம் தவெக தலைமையுடன் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கத்தில், ரவீந்திரநாத்தின் தரப்பிலிருந்து சென்ற தகவல்களுக்கு தவெக தலைமையிடம் இருந்து பெரிய அளவில் பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும், தொடர்ந்து தொடர்பு கொண்டதையடுத்து, தவெக உயர்மட்டத் தலைமையிடம் இருந்து ஒரு முக்கியமான நிபந்தனையுடன் கூடிய பதில் சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ரவீந்திரநாத் மட்டும் கட்சியில் இணைவதால் அரசியல் ரீதியாக பெரிய மாற்றம் ஏற்படாது என்றும், அவருடன் அவரது தந்தை ஓ. பன்னீர்செல்வமும் தவெகவில் இணைந்தால் மட்டுமே அவரது இணைப்பு குறித்து பரிசீலிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் ரவீந்திரநாத் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், தனது அரசியல் பயணத்தை புதிய திசையில் முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

மறுபுறம்,

ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு இதிலிருந்து மாறுபட்டதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ், சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

அவர் வேறு கட்சியில் இணைய முடிவு செய்தால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என்ற அரசியல் கணிப்பும் நிலவுகிறது.

ஏற்கனவே பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் வகையிலான எந்த முடிவையும் எடுக்க ஓபிஎஸ் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் இருந்து விலகி புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்வதில் அவர் அவசரம் காட்டவில்லை என்றே அவரது நெருங்கிய வட்டாரங்கள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ரவீந்திரநாத் தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விரைவாக புதிய கட்சியில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அதற்காக தனது தந்தையும் உடன் வர வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தற்போது உள்ள அரசியல் நிலையை மாற்றுவது சரியான நேரமல்ல என்ற கருத்தில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, தந்தை-மகன் இடையே அரசியல் அணுகுமுறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அது குடும்ப அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தேனி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரவீந்திரநாத்தின் தவெக இணைப்பு முயற்சி எந்த திசையில் நகரும்,

ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவாரா, அல்லது தற்போதைய சூழல் குடும்ப அரசியலிலேயே புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ