புதுச்சேரி அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாவா? - ஆளுநர் - முதல்வர் ஆலோசனைக்குப் பிறகு எதிர்பார்ப்பு அதிகரிப்பு
புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படாத நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் இடையே முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இன்று அல்லது நாளை அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிற
Puducherry assembly


புதுச்சேரி, 02 ஆகஸ்ட் (ஹெச்.எஸ்)

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று சுமார் 80 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இதுவரை துறைகள் (இலாகாக்கள்) ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

அமைச்சர்கள் பதவியேற்றிருந்தாலும், அவர்களுக்கு தனித்துறை பொறுப்புகள் வழங்கப்படாததால் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் மக்கள் தொடர்பான பல்வேறு பணிகளில் தாமதம் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

துறைகள் ஒதுக்கப்படாததால், தொகுதி மேம்பாட்டு பணிகள் மட்டுமின்றி பொதுமக்களின் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் நிர்வாக செயல்பாடுகளில் மந்தநிலை உருவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில், கடந்த 20-ஆம் தேதி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பான கோப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனிடம் சமர்ப்பித்ததாக தகவல் வெளியாகியது.

எனினும், கோப்புகள் வழங்கப்பட்டு பல நாட்கள் கடந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் அரசியல் சூழல் மேலும் பரபரப்பாக மாறியது.

இதையடுத்து, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அமைச்சர்களுக்கு உடனடியாக துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், தாமதம் நீடித்தால் பொதுமக்களை திரட்டி பெரிய அளவிலான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் மனுவை பெற்றுக் கொண்ட துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், விரைவில் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நேற்று மக்கள் மாளிகையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் இடையே முக்கிய ஆலோசனை நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய துறைகள் குறித்த கோரிக்கைகளுக்கும் சாதகமான முடிவு எட்டப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடமும் அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ