தூத்துக்குடியில் 3ம் நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் - துறைமுகத்தில் ஆயிரம் படகுகள் முடக்கம்
தூத்துக்குடி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) தெற்கு இந்தியப் பெருங்கடலில், இந்தியக் கடற்கரையில் இருந்து சுமார் 10,000 கி.மீ தொலைவில் கடந்த ஆகஸ்ட் 13 அன்று அதிக ஆற்றல் கொண்ட நீண்டகால அலைகள் உருவாயின. வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த அலைகளின் தாக்கம் இன்று ம
தூத்துக்குடியில் 3ம் நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் - துறைமுகத்தில் ஆயிரம் படகுகள் முடக்கம்


தூத்துக்குடி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெற்கு இந்தியப் பெருங்கடலில், இந்தியக் கடற்கரையில் இருந்து சுமார் 10,000 கி.மீ தொலைவில் கடந்த ஆகஸ்ட் 13 அன்று அதிக ஆற்றல் கொண்ட நீண்டகால அலைகள் உருவாயின. வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த அலைகளின் தாக்கம் இன்று மாலை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் அலைகள் 1.2 மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். நீண்டகால கடல் அலைகளும் அதிக அலைநீரும் இணையும் போது, கடலோரத் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. சூறாவளிக் காற்று மற்றும் கள்ளக்கடல் அச்சுறுத்தல் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து இன்று மூன்றாம் நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தூத்துக்குடி பழைய துறைமுகம், தருவைக்குளம், வெள்ளப்பட்டி, தாளமுத்துநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்று நாட்களாக மீன்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீன் வரத்து குறைந்து சந்தையில் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.

தாழ்வான கடலோரப் பகுதிகளில் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் சிறிய படகுகளைக் கரைக்கு அருகில் இயக்கக் கூடாது. படகுகள் சேதமடைவதைத் தவிர்க்க, ஒன்றுக்கொன்று போதுமான இடைவெளியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா மற்றும் புதிய துறைமுகம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைப் பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்களின் நுழைவாயில்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் காவல்துறையினர் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b