Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்ட மேலவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
கல்வி உரிமைச் சட்டத்தின் 12(1)(சி) பிரிவின்படி தனியார் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதன் மூலம் 2022-23 முதல் 2026-27 கல்வியாண்டு வரை மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 46 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ஆர்.டி.இ. சேர்க்கை நடைமுறை முழுவதும் வெளிப்படையாக நடைபெறும் வகையில் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் மற்றும் மாணவர் தேர்வு செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த காலத்தை ஒப்பிடுகையில் ஆர்.டி.இ. சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், 2022-23 கல்வியாண்டில் வெறும் 2,203 மாணவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்ததாகவும், 2024-25 கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 29 ஆயிரமாக அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து 2026-27 கல்வியாண்டில் 28,742 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இடங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆர்.டி.இ. சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு சார்பில் விரிவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் காரணமாக தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகரித்து, சேர்க்கை எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சமூகத்தின் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என்றும், அந்த இலக்கை அடையும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தை மேலும் திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாரா லோகேஷ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA