Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திராவில் நடைபெற்ற டிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தாடேப்பள்ளியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
ஆந்திர டிஎஸ்சி தேர்வு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், கேள்வித்தாள் தயாரிக்கும் பணியும், தேர்வை நடத்தும் பொறுப்பும் ஒரே அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜெகன் குற்றம்சாட்டினார்.
கேள்வித்தாள் தயாரிப்பு மற்றும் தேர்வு நடத்துதல் ஆகிய இரு முக்கிய பொறுப்புகளையும் ஒரே நபரிடம் ஒப்படைத்ததே கேள்வித்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை அமைச்சர் நாரா லோகேஷ் சட்டசபையில் ஒப்புக்கொண்டதாகவும் ஜெகன் கூறினார்.
மேலும், கேள்வித்தாள் தயாரிப்பு பிரிவில் பணியாற்றியதாக கூறப்படும் நவீன் என்பவருக்கு டிஎஸ்சி தேர்வில் முதல் ரேங்க் கிடைத்தது குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
முதலில் நவீன் முதல் ரேங்க் பெற்றதாக அரசு சட்டசபையில் தெரிவித்ததாகவும், பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவர் ஆஜராகவில்லை என்ற காரணத்தைக் கூறி பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதாகவும் ஜெகன் தெரிவித்தார்.
வேலை கிடைக்கவில்லை என்று நவீன் நீதிமன்றத்தை நாடியதற்கான காரணம் என்ன? கேள்வித்தாள் கசிவு நவீன் ஒருவருக்கு மட்டுமே சென்றதா அல்லது மேலும் பலருக்கும் சென்றதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஜெகன் வலியுறுத்தினார்.
டிஎஸ்சி தேர்வில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை மூடி மறைப்பதற்காக அரசு உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார். சட்டசபை மற்றும் மேல்சபையில் எதிர்க்கட்சிக்கு உரிய நேரம் வழங்கப்படாமல் இந்த விவகாரம் தவிர்க்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தங்கள் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஏபிபிஎஸ்சி குரூப்-1 தேர்வு தொடர்பாக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தற்போதைய டிஎஸ்சி பிரச்சினையை திசைதிருப்ப அரசு முயற்சிப்பதாகவும் ஜெகன் கூறினார்.
டிஎஸ்சி தேர்வு தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வெளிப்படையான முறையில் சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA