Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை முன்னிட்டு, ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இதன்படி, தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் முக்கிய ரயில்கள், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தங்களது பயணத்தை நிறைவு செய்யும்.
திருவனந்தபுரத்தில் இருந்து எழும்பூர் வரும் உழவன் விரைவு ரயில், இன்று முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் நிறுத்தப்படும். அதேபோல், மங்களூருவில் இருந்து எழும்பூர் வரும் ரயில்,
இன்று முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரத்திலேயே நிறுத்தப்படும்.
மேலும், எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் விரைவு ரயில், ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும்.
அதேபோன்று, எழும்பூரில் இருந்து மங்களூர் சென்ட்ரல் செல்லும் ரயில், ஆகஸ்ட் 21 முதல் 25-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
எனவே, இந்த நாட்களில் எழும்பூர் வழியாக பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே அமைத்துக்கொள்ளுமாறும், தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b