Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை ரத்து செய்து, இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பேரணியில் எத்தனை இருசக்கர வாகனங்களில் எத்தனை பேர் பங்கேற்க உள்ளனர். எந்த இடத்தில் வாகன பேரணி தொடங்கி எங்கு முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 18 அன்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, எந்த மாவட்டங்களின் வழியாக வாகன பேரணி நடத்தப்படும் என்பது குறித்து திராவிடர் கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அப்போது, திருநெல்வேலியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டிற்கும் காவல்துறை அனுமதி மறுக்கத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய காவல்துறை, பேரணிக்கு அனுமதி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாரயணன் முன்பு இன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வந்தது.
அப்போது, திராவிடர் கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன், 4 இடங்களில் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரணிக்கு எத்தனை வாகனம் பயன்படுத்தப்படும், வாகனம் எண், எத்தனை பேர் கலந்து கொள்கின்றனர்? யார் கலந்து கொள்கின்றனர் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும் என காவல்துறை கேட்பது புதுவிதமாக நிபந்தனைகளை விதிப்பதாகவே இருக்கிறது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் அன்புமணி, கலந்து கொள்பவர்கள் யார் என தெரிவிக்கவில்லை என்றால், கூட்டத்தில் திடீரென யாராவது கலந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கட்டாயமாக பேரணியில் கலந்துகொள்பவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாரயணன், திராவிடர் கழகத்தினர் கேட்ட இடங்களில் இருசக்கர வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதனால், யார் கலந்து கொள்கின்றனர் என்ற விவரங்களை வழங்க வேண்டும். விவரங்களை அளிக்கவில்லை என்றால் அனுமதி வழங்க வேண்டியதில்லை என காவல்துறைக்கு
உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN