Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
காஞ்சிபுரம் ஓரிக்கை தணிகைவேல் நகர் பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
வழக்கம்போல் இன்று காலை பணிக்கு சங்கர் சென்ற நிலையில், அவரது மனைவி தீபா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், தீபாவை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவரது கை, கால்களை கட்டிப்போட்டு, சத்தம் வெளியே வராத வகையில் வாயில் துணியை அடைத்துள்ளனர்.
இதையடுத்து தீபா கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு மற்றும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். மொத்தம் சுமார் 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சிறிது நேரத்துக்குப் பிறகு சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, கொள்ளை நடைபெற்ற விதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam