தமிழர்களுக்காக குரல் கொடுப்பது எங்கள் உரிமை - கர்நாடக முதல்வருக்கு வன்னி அரசு பதிலடி
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் தாலுகாவில் தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் கர்நாடக வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vanniarasu


Un


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் தாலுகாவில் தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் கர்நாடக வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிட்ட கண்டனத்தில், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய கர்நாடக வனத்துறையினருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கர்நாடக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றும், தமிழ்நாடு தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டவர்கள் தங்களது வேலையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “திரு. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக துணை நிற்கும் உரிமையும், கடமையும் உலகத் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உண்டு என்றும் வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை என்பது மாநிலம் மற்றும் இன எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை கர்நாடக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்தவித பாகுபாடுமின்றி உரிய நீதி கிடைக்க கர்நாடக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், குற்றமிழைத்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதியாக முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ