Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, கேரளத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு அருகில் டி.கே.சிவக்குமார் அமர்ந்திருந்தார். மேலும் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணைநிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மாநாட்டில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது. நதிநீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நாம் நகர வேண்டிய நேரம் இது. நதிநீர் பிரச்சினைகளை ஒத்துழைப்பு அடிப்படையில் அணுக வேண்டும்.
ஆறுகளுக்கு அரசியல் எல்லைகள் கிடையாது.
கர்நாடகா எப்போதும் பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கை மதிக்க வேண்டும்.
நாங்கள் புகார் கூற வரவில்லை. இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக வந்துள்ளோம். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே. சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை கர்நாடகாவின் கொள்கைகள்.
மேகதாது அணை
மேகதாது அணை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் முக்கியமான திட்டமாகும். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கும் பயனளிக்கும்.
நதிநீர் பிரச்சினைகளை மோதல் இல்லாமல், பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்புடன் தீர்ப்பதற்கான அணுகுமுறை தேவை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA