Enter your Email Address to subscribe to our newsletters

இம்பால் , 20 ஆகஸ்ட்( ஹி.ச.)
மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (ஆகஸ்டு 20) முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) புதுப்பிக்க வேண்டும், நியாயமான தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘நியாயமான தொகுதி மறுவரையறைக்கான இயக்கம்’ (JFD) சார்பில் 48 மணி நேர பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த வேலைநிறுத்தத்தின் 2-வது நாளான மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் உருவ பொம்மைகளை எரித்தும், பேரணியாக சென்றும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பல இடங்களில் சாலை மறியல்
இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர் மற்றும் தௌபால் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியார் வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை வழிமறித்து, தொடர்ந்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கல்வி நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA