மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு - சமரச பேச்சுவார்த்தைக்கு புகார்தாரர் மறுப்பு
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பமில்லை என அவரது சகோதரரின் மனைவி கெரோலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம்
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பமில்லை என அவரது சகோதரரின் மனைவி கெரோலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் உள்ள சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை சமரச தீர்வு மையம் மூலம் பேசி தீர்வு காண நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புகார்தாரர் கெரோலின் நேரில் ஆஜரானார். அவரது தரப்பில், சமரச பேச்சுவார்த்தைக்கு விருப்பமில்லை என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டதால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மரிய வில்சன் தரப்பில், ஒரு பிரச்சினையைத் தவிர மற்ற விவகாரங்களில் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், புகார்தாரர் விரும்பாத நிலையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அவரை கட்டாயப்படுத்த முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால் ஆகஸ்ட் 21-ம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மரிய வில்சன் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, அவருக்கு விலக்கு அளித்தார்.

சமரச பேச்சுவார்த்தையை நீட்டிக்க அனுமதி கோரிய சமரச தீர்வு மையத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மரிய வில்சனின் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam