மூல வைகை ஆற்றங்கரையில் மருத்துவக் கழிவுகள் குவிப்பு - வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு அச்சுறுத்தல் என பொதுமக்கள் புகார்
தேனி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மூல வைகை ஆற்றங்கரை பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். வைகை ஆறு உற்பத்தியாகும் மூலப்பகுதி என்பதால் இப
மூல வைகை ஆற்றங்கரையில் மருத்துவக் கழிவுகள் குவிப்பு - வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு அச்சுறுத்தல் என பொதுமக்கள் புகார்


தேனி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மூல வைகை ஆற்றங்கரை பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர்.

வைகை ஆறு உற்பத்தியாகும் மூலப்பகுதி என்பதால் இப்பகுதி சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆற்றங்கரையோரம் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்து குப்பிகள், கையுறைகள், ரத்தம் படிந்த பஞ்சுகள் மற்றும் பிற மருத்துவக் கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு முறையின்றி கொட்டப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகளால் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் மற்றும் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் அருந்த வரும் வனவிலங்குகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மூல வைகை ஆற்றங்கரையில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆற்றங்கரை பகுதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b