Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் நிர்வாக அலுவலக வசதிகள் ஏற்படுத்தும் பணிகளுக்காக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் விதிமீறல்கள் இருப்பதாக வெளியான செய்திகள் தவறானவை என பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.
10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கை கலைவாணர் அரங்கம் வளாகத்திற்கு மாற்றுவதற்காக, அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், ஒலிவாங்கி உள்ளிட்ட தளவாடங்களை அகற்றும் பணிகள் மட்டுமே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கும், தற்போது நிர்வாக அலுவலக வசதிகள் ஏற்படுத்த கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
நிர்வாக அலுவலக வசதிகள் ஏற்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் 01.09.2026 அன்று பிற்பகல் 3 மணி வரை பெறப்படும் என்றும், அதன் பின்னர் ஒப்பந்தப்புள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு குறைந்த தொகையை கோரிய L1 ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டு, அவருக்கு பணி ஆணை வழங்கப்பட்ட பின்னரே பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 கோடிக்கும் குறைவான மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்ட நாள் முதல் கடைசி நாள் வரை குறைந்தபட்சம் 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு செய்தித்தாள் மற்றும் மாநில ஒப்பந்தப்புள்ளி செய்தி மலரில் 13.08.2026 அன்று வெளியிடப்பட்டது. இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி 15.08.2026 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் 17.08.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 01.09.2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அறிவிப்பு வெளியான நாளில் இருந்து கடைசி நாள் வரை 18 நாட்களும், ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து கடைசி நாள் வரை 15 நாட்களும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களும் அரசு விடுமுறை என்பதால், ஒப்பந்தப்புள்ளி தொடர்பான விவரங்கள் ஆகஸ்ட் 17 முதல் tntenders.gov.in இணையதளத்தில் கிடைக்கும் என அறிவிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் நிர்வாக அலுவலக வசதிகள் ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே முறையாக கோரப்பட்டுள்ளன,எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என பொதுப்பணித்துறை திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ