Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கவில்லை. இந்நிலையில், 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது.
இந்நிகழ்வுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார். இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அத்துடன் மாநில தலைமைச்செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
புதுச்சேரியை பொறுத்தவரை, மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம். தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க நிர்வாகியான துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகிய இருவருக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இதை ஆளுநர் மாளிகையும் உறுதி செய்தது. அதேநேரத்தில், இம்மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது என்டிஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, பாஜகவுக்கு அமைச்சர் பதவி இருவருக்கும் தந்து, கடந்த முறை தந்த இலாகாக்கள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்தது. மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகை புரிய இருந்த நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, 3 மாதங்களுக்கு பிறகே இலாகா அண்மையில் ஒதுக்கப்பட்டது. தற்போதும் பேரவைத் தலைவர் தேர்தலிலும் இழுபறி நீடிக்கிறது.
இச்சூழலில், தென்மாநில முதல்வர்கள் மாநாட்டிலும் பங்கேற்க போவதில்லை என்ற முடிவை முதல்வர் ரங்கசாமி எடுத்துள்ளார். மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகி நூறு நாட்கள் ஆன நிலையிலும் டெல்லி சென்று பிரதமர் மோடியையும் முதல்வர் ரங்கசாமி சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam