Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் நவீன இந்தியாவை உருவாக்கிய பங்களிப்புகளைப் போற்றி கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இந்தியாவின் இளம் பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, இளமையின் கனவுகளோடும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையோடும் இந்தியாவை நவீனப் பாதையில் வழிநடத்தியவர் என குறிப்பிட்டுள்ளார்.
நவீன இந்தியா, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், தொலைத்தொடர்பு புரட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுக்கு ராஜீவ் காந்தி தனது தொலைநோக்குப் பார்வையால் அடித்தளமிட்டதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை ஜனநாயகத்தின் மையத்திற்கு கொண்டு வரும் வகையில் வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்ததையும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முயற்சிகளை முன்னெடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னைப் போன்ற கிராமப்புறப் பின்னணியைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பப் பெண் அரசியலில் அடியெடுத்து வைத்து மக்களுக்காகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளின் பின்னணியிலும் ராஜீவ் காந்தி முன்னெடுத்த ஜனநாயகப் புரட்சிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.
இன்று இந்தியா காணும் இளைஞர் எழுச்சி, டிஜிட்டல் புரட்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன்பே ராஜீவ் காந்தி கண்ட கனவுகளின் தொடர்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால இந்தியாவை கனவு கண்ட அந்த இளம் பிரதமரின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் நவீன இந்தியாவை உருவாக்கிய பங்களிப்பிற்கும் நெஞ்சார்ந்த அன்பையும் மரியாதையையும் செலுத்துவதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியின் கனவான நவீனமான, சமத்துவமான, இளைஞர்களின் சக்தியால் முன்னேறும் இந்தியா என்றும் வழிகாட்டட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam