ஆடி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை நடை அடைப்பு - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
ராமேஸ்வரம், 20 ஆகஸ்ட் (ஹி.ச.) உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஆடி திருக்கல்யாண திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாளை (ஆகஸ்ட் 21 ) ராமநாதசுவாம
ஆடி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நாளை முழுவதும் நடை அடைப்பு - கோவில் நிர்வாகம் அறிவிப்பு


ராமேஸ்வரம், 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஆடி திருக்கல்யாண திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாளை (ஆகஸ்ட் 21 ) ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழாவின் நிறைவுப் பகுதியான திருவிளக்கு பூஜை மற்றும் சுவாமி-அம்மன் கெந்தமாதன பர்வதவர்த்தினி மண்டகபடிக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த விழாவினை முன்னிட்டு நாளை ஒருநாள் முழுவதும் கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆடி திருக்கல்யாண உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகள் நாளை நடைபெற உள்ளதால், கோயிலின் வழக்கமான தரிசனம் மற்றும் புனித நீராடல் நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், மூலவரை தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை.

ஆடி மாதத்தில் சுவாமி, அம்பாளுக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவம் இக்கோயிலின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த விழாவின் போது கோயிலின் உள் பிரகாரத்தில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் மற்றும் திருக்கல்யாண மண்டப அலங்கார பணிகள் நடைபெறுவது வழக்கம். பணிகள் நிறைவு பெறும் வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

எனவே தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுமாறும், நாளை மறுநாள் முதல் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b