கள்ளக்கடல் எச்சரிக்கை எதிரொலி - ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இரண்டாம் நாளாக தடை நீட்டிப்பு
ராமநாதபுரம், 20 ஆகஸ்ட் (ஹி.ச) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி பகுதிக்கு மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று இரண்டாம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக க
Rameswaram-Dhanushkodi ban extended


ராமநாதபுரம், 20 ஆகஸ்ட் (ஹி.ச)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி பகுதிக்கு மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று இரண்டாம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதோடு, அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும் என்பதால் யாரும் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர் தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழக்கமாக தனுஷ்கோடி கடலில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், தற்போது கம்பிப்பாடு கடற்கரை பகுதி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் பாம்பன், குந்துகால், மண்டபம் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படும் என்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தொடர் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இரண்டாவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளதால், அரிச்சல்முனை பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடல் சீற்றம் தணியும் வரை தடை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b