Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வழியாக காரில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீஸ்காரர் விக்னேஷ் ஆகியோர் பஸ் நிலையம் மற்றும் நான்கு முனை சந்திப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை விக்னேஷ் தடுத்து நிறுத்த முயன்றபோது, காரில் இருந்தவர்கள் அவரை தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நான்கு முனை சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் லதா காரை தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் மீது மோதுவது போல் காரை ஓட்டி கொலை செய்ய முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
லதா விலகியதால் கார் வந்தவாசி சாலையில் தப்பிச் சென்றது.
இதையடுத்து தவெக உறுப்பினர் யாசர் உசேன் மற்றும் பொதுமக்கள் காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
காரில் இருந்த சித்தூரை சேர்ந்த கணேசபெருமாள் (46), சிவபிரசாந்த் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
காரை சோதனையிட்டதில் 14 ஹான்ஸ் மூட்டைகள், 3 கூல்லிப் மூட்டைகள், 8 விமல் மூட்டைகள் என மொத்தம் 25 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam