4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - மத போதகருக்கு தூக்கு தண்டனை
நெல்லை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மத போதகர் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கங்கைகொண்டான
தற்கொலை


நெல்லை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மத போதகர் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆபிரகாம், மத போதகராக ஊழியம் செய்து வந்துள்ளார். மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஊழியத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட 12, 13 மற்றும் 8 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உள்ளிட்ட 4 சிறுமிகளிடம் ஆபிரகாம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில், அவர்களது பெற்றோர் அளித்த புகாரில் நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சாட்சிகள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, மத போதகர் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை போக்சோ வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P