Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரி வேளாண் துறை உர விற்பனை தொடர்பாக அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் உரங்களை விற்பனை செய்யக் கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி விவசாயிகளின் தேவைக்காக ஒதுக்கப்படும் மானிய விலை உரங்கள், அண்டை மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த தடை உத்தரவை மீறி தமிழக விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அது மாநிலம் விட்டு மாநிலம் உரம் விற்பனை செய்த குற்றமாக கருதப்படும் என்றும், சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது உரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண் துறை எச்சரித்துள்ளது.
மேலும், உர விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து உர விற்பனையாளர்களும் கட்டாயமாக விற்பனை முனைய கருவி எனப்படும் POS இயந்திரம் மூலமாகவே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு முறையான ரசீது வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
POS கருவி இல்லாமல் உரம் விற்பனை செய்யும் கடைகள் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b