Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
மாணவர்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் போராட்ட உரிமையை யாராலும் தடுக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்ட பதிவில்,
மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற பழமைவாதக் கருத்துகள் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், போராட்டங்களும் விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை சீர்குலைக்கும் முயற்சிகளே புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாணவர்களை தாக்க உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நடத்திய சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டத்தின் முடிவுகளும், தமிழிசை சௌந்தரராஜனின் எக்ஸ் பதிவும் மாணவர்களையும் இடதுசாரிகளையும் குற்றம்சாட்டும் ஒரே திசையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்கள் சங்கமாக செயல்படும் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்றும், அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மூடநம்பிக்கைகளை பரப்பும் தளங்களாக மாற்றும் முயற்சிகளை மாணவர்கள் முறியடிப்பார்கள் என்றும் சு.வெங்கடேசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P