தென் மாநிலங்களின் உரிமைகள், நிதிப் பங்கீடு, நதிநீர் பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய் வலியுறுத்தல்
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) மகாபலிபுரத்தில் நடைபெற்ற தெற்கு மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய், தென் மாநிலங்களின் பொருளாதார பங்களிப்பு, நிதி கூட்டாட்சி, நதிநீர் உரிமைகள், போதைப்பொருள் தடுப்பு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வே
விஜய்


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

மகாபலிபுரத்தில் நடைபெற்ற தெற்கு மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய், தென் மாநிலங்களின் பொருளாதார பங்களிப்பு, நிதி கூட்டாட்சி, நதிநீர் உரிமைகள், போதைப்பொருள் தடுப்பு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை முன்வைத்தார்.

தென் மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிப்பதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலங்கள் முக்கிய இயந்திரமாக இருப்பதாகவும் விஜய் தெரிவித்தார்.

ஆன்லைன் விற்பனை, சட்டவிரோத விநியோகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் மூலம் போதைப்பொருட்கள் இளைஞர்களை சென்றடைவது கவலைக்குரியது எனக் கூறிய அவர், தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து உளவுத்தகவல்களை பகிர்ந்து கொண்டு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை ஒடுக்க வேண்டும் என்றார்.

“Drug-Free Tamil Nadu மட்டுமல்ல; Drug-Free South India உருவாக்க வேண்டும்” என விஜய் வலியுறுத்தினார்.

மாநில எல்லைகளை கடந்து பொதுவான தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து மையங்களை உருவாக்க வேண்டும் என்றும், உற்பத்தி மையங்களை துறைமுகங்களுடன் இணைக்கும் தொழில் மற்றும் சரக்கு வழித்தடங்களை உருவாக்கினால் ஏற்றுமதி போட்டித்திறனும் வெளிநாட்டு முதலீடும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

பெங்களூரு பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் விஜய் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் தொகை கட்டுப்பாடு, மனிதவள மேம்பாடு, நிதி ஒழுக்கம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்ட விஜய், மாநிலங்களின் நிதி தன்னாட்சியை மதிக்க வேண்டும் என்றார்.

“சிறப்பு சலுகை கேட்கவில்லை; நியாயமான மற்றும் சமமான நிதிப் பங்கீட்டையே கேட்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

GST அமல்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் நெகிழ்வான வருவாய் ஆதாரங்கள் குறைந்துள்ளதாகவும், வரி விகித நிர்ணயத்தில் மாநிலங்களுக்கு உரிய நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கீழ்நிலை மாநிலங்களின் நியாயமான நீர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புகள், நடுவர் மன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளின் முடிவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் விஜய் கூறினார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய முடிவுகளையும் உரிய நேரத்தில் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பான நீதிமன்ற வழிகாட்டுதலையும் குறிப்பிட்டார்.

NEET தேர்வு கிராமப்புற மற்றும் சமூக–பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்த விஜய், தமிழகத்தில் MBBS, BDS, AYUSH உள்ளிட்ட மாநில ஒதுக்கீட்டு இடங்களை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என விஜய் கவலை தெரிவித்தார்.

“மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் தண்டனை இருக்கக்கூடாது” எனக் கூறிய அவர், எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதமும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்றதற்காக குறைக்கப்படாது என்ற தெளிவான சட்டப்பூர்வ உறுதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam