Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானா மாநில வருவாய்த்துறையில் 22ஏ தடைப்பட்ட நிலங்கள் என்ற பெயரில் முறைகேடுகளும், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான தொந்தரவுகளும் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சரும், பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ.வுமான ஹரீஷ் ராவ் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாஸ் ரெட்டியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஹரீஷ் ராவ் வலியுறுத்தி உள்ளார்.
22ஏ விதியை தவறாக பயன்படுத்துவதாக புகார்
சட்டப்படி தடை செய்யப்பட்ட நிலங்களின் பதிவை தடுப்பதற்காக பயன்படுத்த வேண்டிய 22ஏ விதிமுறையை, தனியார் சொத்துகள் மீதும் செயற்கையான சர்ச்சைகளை உருவாக்கி பணம் வசூலிப்பதற்காக பயன்படுத்துவதாக ஹரீஷ் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொடங்கி ஐதராபாத், ரங்காரெட்டி, மேட்சல், சங்காரெட்டி மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் ஒருதலைப்பட்சமாக 22ஏ பட்டியலில் சேர்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் சொத்து உரிமையாளர்கள் அச்சத்திற்கும், பல்வேறு சிரமங்களுக்கும் ஆளாகி வருவதாகவும் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே முறைப்படுத்தப்பட்ட நகர்ப்புற நில உச்சவரம்பு (ULC) நிலங்களும், முறையான பதிவு ஆவணங்கள் உள்ள சொத்துகளும் மீண்டும் 22ஏ பட்டியலில் சேர்க்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
30 சதவீத கமிஷன் வசூல்?
வருவாய்த்துறையில் 30 சதவீத கமிஷன் வசூலிக்கும் வலையமைப்பு செயல்படுவதாகவும் ஹரீஷ் ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 22ஏ பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலத்தை மீண்டும் அந்த பட்டியலில் இருந்து நீக்குவதற்கு, அதன் சந்தை மதிப்பில் 30 சதவீதம் வரை கமிஷன் கேட்கப்படுவதாக இடைத்தரகர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, அவுட்டர் ரிங் ரோடு (ORR) சுற்றுப்பகுதிகளில் உள்ள அதிக மதிப்புள்ள நிலங்களை முடக்கி, அரசியல் செல்வாக்கு கொண்ட நிறுவனங்களுடன் 50:50 கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு நில உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
40 ஆயிரம் ஏக்கர்
யாதாத்ரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் 22ஏ பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கோமட்டிரெட்டி வெங்கட்ரெட்டி தெரிவித்திருந்ததாக ஹரீஷ் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுயாதீன விசாரணை நடத்த கோரிக்கை
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 22ஏ பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட அனைத்து நிலங்கள் குறித்தும் முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று ஹரீஷ் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தடயவியல் தணிக்கை நடத்த வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக 22ஏ தடைப்பட்டியலில் உள்ள நிலங்களின் விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வருவாய்த்துறையில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஹரீஷ் ராவ் எச்சரித்துள்ளார்.
மேற்கண்டவை ஹரீஷ் ராவ் தனது கடிதத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA