தென்மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – டி.கே. சிவகுமார்
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) மகாபலிபுரத்தில் நடைபெற்ற தெற்கு மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தென்மாநிலங்களின் நிதி, பிரதிநிதித்துவம் மற்றும் நதிநீர் உரிமைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். த
டி.கே. சிவக்குமார்


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

மகாபலிபுரத்தில் நடைபெற்ற தெற்கு மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தென்மாநிலங்களின் நிதி, பிரதிநிதித்துவம் மற்றும் நதிநீர் உரிமைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

தென்மாநிலங்கள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் மட்டுமே கொண்டிருந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதம் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்.

15-வது நிதிக்குழுவில் கர்நாடகாவின் வரிப் பகிர்வு 4.7 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக குறைக்கப்பட்டதால், 6 ஆண்டுகளில் சுமார் ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.5,495 கோடி சிறப்பு மானியம் மற்றும் ரூ.6,000 கோடி மாநிலத்துக்கான குறிப்பிட்ட மானியம் வழங்கப்படவில்லை என்றும் சிவகுமார் கூறினார்.

கர்நாடகாவின் வரிப் பங்கை மீண்டும் 4.7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும், பெங்களூரு–மும்பை அதிவேக ரயில் திட்டம், ராய்ச்சூரில் எய்ம்ஸ் உள்ளிட்ட கூடுதல் மத்திய திட்டங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களவைத் தொகுதி மறுவரையறையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என வலியுறுத்திய சிவகுமார், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை முடக்கி, அதற்குள் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணாறு, பாலாறு உள்ளிட்ட தென்னிந்திய நதிகள் மாநில எல்லைகளை அறியாது எனக் குறிப்பிட்ட சிவகுமார், நதிநீர் பகிர்வைத் தாண்டி நதிநீர் ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

சமத்துவம், வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கை மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, ஏழைகளுக்கான வீடுகள், கடலோர அரிப்பு, பேரிடர் நிவாரணம், கனிம வளங்கள், விவசாயிகள் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் சிவகுமார் முன்வைத்தார்.

மேலும், கனிம வளங்கள் தொடர்பான புதிய மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

“கர்நாடகா புகார் தெரிவிக்க வரவில்லை; இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு பங்காளியாக வந்துள்ளது. நிதியிலும், பிரதிநிதித்துவத்திலும், மாநிலங்களுக்குரிய மரியாதையிலும் நியாயம் மட்டுமே எங்களுக்கு தேவை என சிவகுமார் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam