Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் விவசாயிகளின் பாசன தேவைக்காக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்காலுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ராஜ வாய்க்கால் பாசனத்தை நம்பி பரமத்தி வேலூர், வெங்கரை, சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, அகத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விவசாயிகளின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த அனைத்து வணிகர் சங்கங்களும் இணைந்து இன்று காலை முதல் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பரமத்தி வேலூர் நகரில் நூற்றுக்கணக்கான மளிகை கடைகள், ஜவுளி கடைகள், ஹோட்டல்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.
இந்த ஒரு நாள் கடையடைப்பால் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராஜ வாய்க்காலுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் விவசாயிகளும் வணிகர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b