Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகனம் வழங்குவது வசதிக்காக அல்ல; அவர்கள் அரசின் அங்கமாக அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படுவதற்கான உரிமை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நகராட்சி தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், மேயர், துணை மேயர், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் உள்ளிட்டோர் அரசு வாகனங்களில் பயணிக்கும் நிலையில், அரசமைப்பு சட்ட படிநிலையில் அவர்களுக்கு மேலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் தேவை என்றும், அது உரிமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கையை கடந்த சட்டமன்றத்திலேயே தானும் சேலம் அருள், பூமிநாதன் ஆகியோரும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்து பெற்று, அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.
அரசு செயலாளர்கள் தொடங்கி பல்வேறு துறை அலுவலர்களுக்கு அரசு வாகனங்கள் வழங்கப்படும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு வாகனம் வழங்குவதில் செலவினத்தை காரணமாகக் கூறுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அரசு வாகனங்கள் பேட்டரி வாகனங்களாக (EV) இருப்பதே சிறந்தது என்றும் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P