ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு - பரிசல் இயக்க தடை நீட்டிப்பு
தருமபுரி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்
Water inflow into the Cauvery at Hogenakkal


தருமபுரி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பிரதான அருவி, ஐந்தருவி, சினிஃபால்ஸ் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

இதனிடையே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பரிசல் இயக்குவதற்கு தொடர்ந்து இன்று 5-வது நாளாக தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பரிசல் ஓட்டிகள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களில் குளிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b