Enter your Email Address to subscribe to our newsletters

கொழும்பு , 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியாவின் 600-வது டெஸ்ட் வெற்றி என்ற சிறப்பையும் இந்த ஆட்டம் பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:-
“இந்தியாவின் 600-வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது உண்மையிலேயே சிறப்பானது. இது எங்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் நாங்கள் வலுவான நிலையில் இருந்தோம்.
ஆனால் வானிலை காரணமாக கடைசி நாள் ஆட்டம் நடைபெறுமா? என்பதில் உறுதி இல்லாததால், போட்டி தொடங்கியபோது சற்று அழுத்தம் இருந்தது.
இருந்தாலும் எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டது.
மனவ் சுதர் அற்புதமாக பந்து வீசி வருகிறார். அவர் விளையாடிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவரது பந்துவீச்சு அபாரமாக இருந்தது. மிகவும் திறமை வாய்ந்த வீரராக இருக்கும் அவர், இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடக்கூடியவராக தெரிகிறார்.
தேவ்தத் படிக்கல்லின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. சதம் அடித்த பிறகும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அதை 167 ரன்கள் கொண்ட பெரிய இன்னிங்சாக மாற்றியது அருமையாக இருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதே எங்களது இலக்கு. அதற்காகத்தான் நாங்கள் விளையாடி வருகிறோம். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது எளிதானது அல்ல. எனவே இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியுடன் இந்திய அணி நம்பிக்கையுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்ள உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை வலுப்படுத்தும் வகையில், தொடரிலும் தொடர்ந்து வெற்றிகளை குவிப்பதில் இந்திய அணி கவனம் செலுத்துகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA