Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை கன்னத்தில் அடித்ததில், 6 வயது சிறுவன் பயத்தில் ஆசிரியையின் கையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினம் வன்தவுன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் - சாய்பிரியா தம்பதியின் 6 வயது மகன் பிரணய் தேஜா, அப்பகுதியில் உள்ள 'லிட்டில் கார்டன்' என்ற தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தான்.
கடந்த வாரம் குடும்பத்துடன் ஆன்மீகச் சுற்றுலா சென்று திரும்பியதால், சிறுவன் வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்றுள்ளான்.
காலை 10.30 மணியளவில் வகுப்பு ஆசிரியை சுஷ்மா மாணவர்களின் வீட்டுப்பாடங்களைச் சரிபார்த்துள்ளார்.
அப்போது பிரணய் தேஜா வீட்டுப்பாடம் செய்யாததால், ஆசிரியை அவனைக் கூப்பிட்டுச் சட்டையைப் பிடித்துக் கன்னத்தில் அறைந்து கண்டித்துள்ளார். இதனால் கடும் பயமடைந்த சிறுவன், நொடிப் பொழுதில் ஆசிரியை மீதே சுருண்டு விழுந்தான்.
பதறிய ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் சிறுவனை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தீவிர மனஅழுத்தம் மற்றும் பயத்தின் காரணமாகச் சிறுவனின் இதயம் திடீரெனச் செயல்படாமல் போனதே இறப்பிற்கான காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வன்தவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியை சுஷ்மாவை உடனடியாகக் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / Durai.J