Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தினமும் சுமார் 2,200 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், இண்டிகோவின் விமான டிக்கெட் முன்பதிவு சேவையில் நேற்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முயன்ற பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இண்டிகோ இணையதளத்தில் விமானங்களைத் தேடியபோது, சில பயணிகளுக்கு No Data Available என்ற தகவல் தோன்றியது. இதன் காரணமாக விமானங்களின் இருப்பு விவரங்களைப் பார்க்கவும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சில பயணிகள் இணையவழி செக்-இன் மற்றும் பணம் செலுத்துவதை உறுதி செய்வதிலும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
இண்டிகோவின் முன்பதிவு சேவையில் இந்த வாரத்தில் 2-வது முறையாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 19-ந்தேதியும் இதேபோன்ற பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,
அதன் முக்கிய முன்பதிவு தளத்தில் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதனால் சில வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தது.
மேலும், தொழில்நுட்ப கூட்டாளியுடன் இணைந்து பிரச்சினையை விரைந்து சரிசெய்யும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியது.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், பின்னர் பிரச்சினை சரிசெய்யப்பட்டு முன்பதிவு சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA