‘அலுவல்’ என்கிறார்கள், அமித் ஷாவின் ‘நழுவல்’ நாடறியும் – மாணிக்கம் தாகூர் விமர்சனம்
தமிழ்நாடு, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) பாஜகவைச் சேர்ந்தவர்கள் ‘அலுவல் பயணம்’ எனக் கூறும் விவகாரத்தை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் உள்துறை அமைச்சர் அமித் ஷா நழுவுவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையா
மாணிக்கம் தாகூர்


தமிழ்நாடு, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

பாஜகவைச் சேர்ந்தவர்கள் ‘அலுவல் பயணம்’ எனக் கூறும் விவகாரத்தை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் உள்துறை அமைச்சர் அமித் ஷா நழுவுவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இது அலுவல் பயணம் என்றால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஓடி ஒளிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நடவடிக்கை என்ன அரசுப்பணி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான வன்முறை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் நேருக்கு நேர் பதில் அளிக்க அமித் ஷா தயங்கியதாக குற்றம்சாட்டியுள்ள மாணிக்கம் தாகூர், அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், அமித் ஷா கொண்டு வரும் மசோதாக்கள் தொடர்பான விவாதங்களின்போதும் அவைக்கு வராமல் தவிர்த்ததாக குற்றம்சாட்டிய அவர், பாஜக அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே அமித் ஷா வழக்கம்போல் ‘நழுவல்’ வேலையில் ஈடுபடுவதாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாத பாஜகவினர், மற்றவர்களுக்கு ‘அலுவல்’ குறித்து பாடம் எடுப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள் என அரசியல் நாகரிகம் குறித்து பேசும் பாஜகவினர், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய சம்பவங்கள் தொடர்ந்து வருவதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்களை தரக்குறைவாக பேசுவதுதான் அருவருக்கத்தக்க அரசியல் என்றும், இதுபோன்ற பேச்சுகளையே ஒட்டுமொத்த தமிழக மக்களும் வெறுக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam