உழவர்களுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு 70 நாள்கள் ஆகியும் வழங்கப்படவில்லை: அறுவடைக்கு முன்பாவது உழவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தி உள்ளார். அதில், காவிரி பாசன மாவட
Anbumani Ramadoss


சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு 70 நாள்கள் ஆகியும் வழங்கப்படவில்லை: அறுவடைக்கு முன்பாவது உழவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தி உள்ளார்.

அதில்,

காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு உரம், விதைகள் மற்றும் நேரடி உதவி என பல வடிவங்களில் ஏக்கருக்கு ரூ.4000 கிடைக்கும் வகையில் குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, 70 நாள்களாகியும் இன்று வரை உழவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மிகவும் நெருக்கடியான காலத்தில் உழவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறுவைத் தொகுப்பை வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், நடப்பாண்டில் இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், உழவர்கள் குறுவை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், எப்போதும் வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தான் கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவைத் தொகுப்பு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

குறுவை சாகுபடி தொகுப்பு என்பதே நெற்பயிர்களை நடவு செய்யும் காலத்திலும், அதைத் தொடர்ந்து வரும் சில நாள்களிலும் வழங்கப்பட வேண்டியதாகும்.

ஆனால், நடவு முடிந்து விரைவில் அறுவடை தொடங்கவுள்ளது. இன்னும் 10 நாள்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் பருவம் தொடங்கவுள்ள நிலையில், இன்று வரை குறுவைத் தொகுப்பு வழங்கப்படாமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

உழவர்களுக்கான உதவி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும்.

இதை அரசு உணர்ந்து கொண்டு உழவர்களுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN