Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகனை, மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச பொது சேவை ஆணையமான APPSC-க்கும், ஆசிரியர் பணியிடங்களுக்கான DSC தேர்வுக்கும் இடையே உள்ள வித்தியாசம் கூட ஜெகனுக்கு தெரியாது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெகன் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் பேசிய பழைய வீடியோ ஒன்றை நாரா லோகேஷ் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், APPSC, DSC ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்று ஜெகன் கருதுவதாக லோகேஷ் கிண்டல் செய்துள்ளார். அரசு பணி நியமனங்கள் குறித்த அடிப்படை புரிதல் இல்லாததால்தான், ஜெகன் தலைமையிலான கடந்த 5 ஆண்டு ஆட்சியில் ஒரு DSC தேர்வுகூட நடத்தப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக சட்டசபையில் நடைபெறும் விவாதத்தை எதிர்கொள்ள முடியாமல் ஜெகன் அதிலிருந்து விலகிச் செல்வதாகவும் நாரா லோகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
APPSC மற்றும் DSC ஆகியவை வெவ்வேறு பணிகளுக்கான தனித்தனி தேர்வு மற்றும் நியமன அமைப்புகள் என்பதை சுட்டிக்காட்டியுள்ள லோகேஷ், இதுகுறித்து ஜெகனுக்கு போதிய புரிதல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெகனை விமர்சித்து நாரா லோகேஷ் வெளியிட்ட இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA