Enter your Email Address to subscribe to our newsletters

டாக்கா, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
வங்கதேசத்தின் புதிய அதிபராக ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மொத்தம் 349 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 343 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஆளும் தரப்பு வேட்பாளரான 78 வயது மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் 255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுமான ஒலி அகமது 88 வாக்குகள் பெற்றார்.
இதையடுத்து ஆலம்கீர் வெற்றி பெற்றதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உத்தீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆலம்கீர், இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளில் வங்கதேச அதிபர் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு போட்டியுடன் நடைபெற்ற முதல் அதிபர் தேர்தலும் இதுவாகும்.
பல ஆண்டுகளாக வங்கதேசத்தில் அதிபர் தேர்தல்கள் பெரும்பாலும் போட்டியின்றி அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நடைபெற்ற நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / Durai.J