வங்கியில் அடமானம் வைத்த 2.1 கிலோ தங்க நகைகள் திருட்டு - போலி நகைகளை வைத்து ரூ.3.09 கோடி மோசடி செய்த உதவி மேலாளர் கைது
சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை அயனாவரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த சுமார் 2,179 கிராம் தங்க நகைகளை திருடி, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து ரூ.3.09 கோடி மோசடி செய்ததாக வங்கியின் உதவி மேலாளர் கை
Bq


சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை அயனாவரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த சுமார் 2,179 கிராம் தங்க நகைகளை திருடி, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து ரூ.3.09 கோடி மோசடி செய்ததாக வங்கியின் உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அயனாவரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் தினேஷ் குமார், கடந்த 13.08.2026 அன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், தங்கள் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்த ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொட்னூரு முரளி கிருஷ்ணா, வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த தங்க நகைகளை முறைகேடாக எடுத்துச் சென்று, அவற்றுக்குப் பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்துள்ளதாகவும், இதன் மூலம் வங்கிக்கு சுமார் ரூ.3.09 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

போலீசாரின் விசாரணையில், அயனாவரம் வங்கி கிளையில் சுமார் 21 வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த 2,179 கிராம் தங்க நகைகளை உதவி மேலாளர் முரளி கிருஷ்ணா, யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

திருடிய தங்க நகைகளை வேறு இடங்களில் அடமானம் வைத்து அதன்மூலம் பணம் பெற்றதாகவும், அந்தப் பணத்தை இணையவழி விளையாட்டுகள் மற்றும் சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களின் அசல் தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்து, தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிக்கு சுமார் ரூ.3.09 கோடி பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வங்கி உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா (34) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோசடி செய்யப்பட்ட தங்க நகைகள் எங்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கையிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ