Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மின்சார வாரியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் காலியாக உள்ள பகுதியைத் திரும்பப் பெறக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் மின்சார வாரியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தை மாற்றுவதற்காக காலியாக உள்ள நிலத்தை மின்சார வாரியத்திடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றினால், சென்னை உயர்நீதிமன்றம் மட்டுமின்றி வளாகத்தில் செயல்பட்டு வரும் பிற முக்கிய பொது பயன்பாட்டு சேவை அமைப்புகளுக்கான மின்சார விநியோகமும் பாதிக்கப்படும் எனக் கருத்து தெரிவித்தனர்.
நீதித்துறை மற்றும் முக்கியமான பொதுச் சேவை அமைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது உண்மையான பொதுநல நோக்கத்தைக் கொண்ட நடவடிக்கை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மின்சார விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பு நீதிமன்றப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளையும் பாதிக்கக்கூடும் என்பதால், தற்போதைய மின் கட்டமைப்பை பாதுகாப்பது அவசியம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் மின்சார வாரியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் காலியாக உள்ள பகுதியைத் திரும்பப் பெறக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ