தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி நாளை தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதனை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்
Shanmugam


Hh


சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதனை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறிவைத்ததன் மூலம் தலைமைச் செயலாளரின் சித்தாந்த சார்பு அம்பலமாகியுள்ளது.

அரசு எந்திரத்தை தனது நோக்கத்திற்காக தவறாகப் பயன்படுத்தும் எல்லைக்கும் அவர் சென்றுள்ளார்.

இனி அவரிடம் இருந்து நியாயமான நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது.

கடிதத்தின் பொருள் இடதுசாரி இயக்கங்கள் தொடர்பானதாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் மாணவர்களின் போராட்ட உரிமைகளை அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.

இது மிகவும் ஆபத்தானது. ஒன்றிய அரசின் பாணியைப் பின்பற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே இதைக் கருத வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கை முதலமைச்சரின் அனுமதியுடன்தான் நடைபெற்றதா என்ற கேள்வியும் எழுகிறது.

கல்லூரிக் கல்வி இயக்குநர் தனது சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் முடிவும், அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சிறப்புச் செயலாளர் அனுப்பிய கடிதமும் இன்னும் நீடிக்கின்றன.

உயர்கல்வித் துறை செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றைத் தவிர மற்ற இயக்ககங்களோ, பல்கலைக்கழகங்களோ இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை என்று நாளிதழ் ஒன்றுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தமிழக அரசின் சிறப்புச் செயலாளர் அனுப்பிய கடிதம் கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மூலமாக அனைத்து கல்லூரிகளுக்கும் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதங்கள் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை. மேலும், “மிகுந்த முன்னுரிமை, உடனடி நடவடிக்கை” என்ற அறிவுறுத்தலுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த முடிவு எவ்வளவு தீவிரமாகவும் திட்டமிட்டும் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

எனவே, கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்று கூறுவது உண்மையல்ல. முடிவெடுத்தவர்களை விட்டுவிட்டு, அதனை செயல்படுத்தியவர்களை மட்டும் குற்றம் சாட்டுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டபோது உயர்கல்வித் துறை அமைச்சர் அளித்த விளக்கம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கல்வி வளாகங்களில் அமைதி என்பது மாணவர்களின் போராட்ட உரிமையை ஒடுக்குவதன் மூலம் கிடைப்பதா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். சில வார்த்தைகள் தவறாக இடம்பெற்றுவிட்டதாக அமைச்சர் கூறியுள்ள நிலையில், மொத்த கடிதத்தின் உள்ளடக்கமே மோசமானதாக இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் தொடர்பான விவகாரத்திலும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் குறிப்பில், பயிற்சி முடிவடைந்ததால் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேருவதற்காக விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி முடிந்த பின்னர் வேறு பணியில் சேர்வதற்காக ஒருவர் விடுவிக்கப்பட்டதை நடவடிக்கை என்று கூற முடியுமா என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அடுத்தடுத்து இடதுசாரிகள் குறிவைக்கப்படுவதை தற்செயலான சம்பவங்களாகக் கருத முடியாது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழக முதல்வரும் தமிழக அரசும் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்; தலைமைச் செயலாளர் அந்தப் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ