Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் விவகாரத்தை சரியாக கையாளாமல், தேவையற்ற விவாதமாக மாற்றிவிட்டதாக த.வெ.க. அரசை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசியலில் ஒரு செயலை செய்வதைவிட, அதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும் என விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்ததும், எம்.எல்.ஏ.க்கள் அதனைப் பாராட்டியதும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதே நாளில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அது குறித்த விவாதத்தை விட எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் விவகாரமே பேசுபொருளாக மாறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரப்பூர்வ வாகனம் வழங்குவது நியாயமற்ற கோரிக்கை அல்ல என்றும், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கே அரசு வாகனங்கள் வழங்கப்படும் நிலையில், மக்கள் பணிகளை மேற்கொள்ள எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தை முறையாக கையாளாமல் பெரிய பிரச்சினையாக மாற்றி த.வெ.க. அரசு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
மேலும், “அரசியலில் என்ன செய்கிறோம் என்பதைவிட, அதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ‘Optics’ மிகவும் முக்கியம்” எனக் குறிப்பிட்ட அவர், தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற முடிவுகளை நேரடியாக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்காமல், மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு வாகனங்களை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. அரசுக்கு நிர்வாக அனுபவம் இல்லாததால், இவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த தமிழ்நாட்டை சரியான திசையில் கொண்டு செல்ல முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
“ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம். செங்குத்தான வளர்ச்சிப் பாதையில் இறங்குவது சுலபம்; ஏறுவது மிகவும் கடினம். நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம்” என துரைமுருகன் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P