Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026-ஆம் ஆண்டுக்கான 3-ஆம் சுற்று தற்காலிக இடஒதுக்கீடு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
3-ஆம் சுற்றில் மொத்தம் 1,02,719 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக மொத்தம் 1,06,583 இடங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.
இதில், பொதுக் கல்விப் பிரிவில் 66,159 மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 2,481 மாணவர்களுக்கும் தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பொதுக் கல்விப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆகிய இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 68,640 மாணவர்களுக்கு தற்காலிக இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தற்காலிக இடஒதுக்கீடு பெற்றுள்ள மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தும் வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது இடஒதுக்கீட்டை ஆகஸ்ட் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இடஒதுக்கீட்டை உறுதி செய்யாத மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, 3-ஆம் சுற்றில் தற்காலிக இடஒதுக்கீடு பெற்றுள்ள மாணவர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது இடஒதுக்கீட்டை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ