Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம்
சேரன்மகாதேவி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் 9 ஊழியர்கள், இ-போஸ் இயந்திரங்களில் ஏற்படும் நெட்வொர்க் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, தங்களிடம் இருந்த இ-போஸ் இயந்திரங்களை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அந்த இயந்திரங்களை ரேஷன் தாசில்தாரிடம் ஒப்படைக்க ஊழியர்கள் முயன்றதாக கூறப்படுகிறது. நெட்வொர்க் இணைப்பு சரிவர கிடைக்காததால், ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான பரிவர்த்தனைகளை இ-போஸ் இயந்திரத்தில் பதிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதாகவும், இதனால் ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேஷன் பொருட்களை உரிய நேரத்தில் வழங்க முடியாத சூழல் உருவாகும்போது, பொதுமக்களின் அதிருப்தியை ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊழியர்கள் தெரிவித்துள்ள நெட்வொர்க் பிரச்சனை உள்ளிட்ட குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் உறுதியைத் தொடர்ந்து, ஊழியர்கள் தாங்கள் கொண்டு வந்த இ-போஸ் இயந்திரங்களை மீண்டும் எடுத்துச் சென்றனர்.
9 ரேஷன் கடை ஊழியர்கள் ஒரே நேரத்தில் இ-போஸ் இயந்திரங்களை ஒப்படைக்க வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / P YUVARAJ