Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதற்காடு,சோளாடி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (43). கட்டுமான பணி வேலை செய்து வரும் இவர், சமூக வலைதளங்களில் “TN 43 Vicky” என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 09.08.2026 அன்று கூடலூர் அரசு போக்குவரத்துக் கிளை பணிமனைக்குள் உரிய அனுமதியின்றி சென்றதாக கூறப்படும் விக்னேஸ்வரன், அங்கு பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் சக்கரங்களை வீடியோ பதிவு செய்துள்ளார்.
மேலும், பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளையும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புற பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து ஒன்று வழியிலேயே பழுதாகி நின்ற சம்பவத்தையும், பணிமனையில் பதிவு செய்த காட்சிகளையும் மார்ஃபிங் செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த பதிவுகளில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அவதூறாக பேசியதுடன், பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பும் வகையில் பதிவுகள் இருந்ததாக அரசு போக்குவரத்துக் கிளை மேலாளர் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் கூடலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அரசு துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவிட்டு, அவற்றை பகிர்ந்ததாக கூறப்படும் தகவல்களும் போலீசாருக்கு கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே இவர் மீது வழக்குகள் இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, கூடலூர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
பின்னர் அவரை கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN