Enter your Email Address to subscribe to our newsletters

ஆமதாபாத் , 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் குடித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாவ்நகர் மாவட்டம் காராகடி கிராமத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.
இதையடுத்து 5 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்த மதுபானத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
இதற்கிடையே, காராகடி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் கள்ளச்சாராயம் குடித்த சிலர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலி மதுபான பாட்டில்கள்
கள்ளச்சாராயம், பிரபல மதுபான நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பாட்டில்களில் நிரப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாட்டில்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த போலி மதுபான பாட்டில்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? எங்கு தயாரிக்கப்பட்டன? அவற்றை பாவ்நகருக்கு அனுப்பியது யார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடையதாக கூறப்படும் 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கள்ளச்சாராயம் நிரப்பப்பட்டிருந்த மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA