Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
கொச்சி மெட்ரோ ரெயில் லிமிடெட் நிறுவனத்தின் பெயரை ‘கேரளம் மெட்ரோ ரெயில் லிமிடெட்’ என மாற்ற கேரள அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கொச்சி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் லோநாத் பெஹரா, இதுதொடர்பாக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
கொச்சி நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மெட்ரோ ரெயில் நிறுவனம், தற்போது தனது பணிகளை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு நகரங்களில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர, கொச்சி வாட்டர் மெட்ரோ மற்றும் மின்சார வாகன போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்களையும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, ஒரு குறிப்பிட்ட நகரத்தின் பெயரை மட்டும் கொண்டிருப்பதைவிட, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் மெட்ரோ மற்றும் போக்குவரத்து திட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் நிறுவனத்தின் பெயரை ‘கேரளம் மெட்ரோ ரெயில் லிமிடெட்’ என மாற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொச்சி மெட்ரோ நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கு எர்ணாகுளம் தொகுதி எம்.பி. ஹைபி ஈடன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை கேரள அரசு பரிசீலித்து, அடுத்தகட்ட முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA