Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சூர் , 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆவணி மாத முகூர்த்த நாட்களில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 426 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
மேலும், 30-ந் தேதி 338 ஜோடிகளுக்கும், செப்டம்பர் 13-ந் தேதி 320 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, திருமண நிகழ்ச்சிகளை எந்தவித இடையூறும் இன்றி நடத்துவது, பக்தர்களின் தரிசனம் தடைபடாமல் இருப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக குருவாயூர் கோவிலில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
கோவில் தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சூர் மாவட்ட கலெக்டர் சிவ சுரேந்திரன், குருவாயூர் தேவசம்போர்டு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மனோஜ், ஷினிஜா, போலீஸ் துணை கமிஷனர் சுரேந்திரன் மங்காடு, இன்ஸ்பெக்டர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திருமணங்கள் நடைபெறும் 23-ந் தேதி, 30-ந் தேதி மற்றும் செப்டம்பர் 13-ந் தேதி ஆகிய 3 நாட்களிலும் கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோவிலுக்குள் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
திருமணங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கப்படுவதற்காக, இந்த 3 நாட்களிலும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட உடனேயே திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும். இதற்காக 6 திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோவில் உள்பகுதி, வெளிப்பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA