கூடங்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி – 2 காவலர்கள் பணியிடை நீக்கம்
நெல்லை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் காவல்கிணற்றைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூடங்குளத்தைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் ரமேஷுக்கு தங்கை முறை எனக் கூறி, பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன
தற்கொலை


நெல்லை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் காவல்கிணற்றைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூடங்குளத்தைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் ரமேஷுக்கு தங்கை முறை எனக் கூறி, பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை கூடங்குளம் காவல் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கூடங்குளம் போலீசார் ரமேஷை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

விசாரணைக்காக காவல் நிலையம் வந்த ரமேஷ், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் இருந்து பெண்ணுக்கு போன் செய்து போலீசார் விசாரித்தபோது, அந்தப் பெண் ரமேஷை காதலிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ரமேஷுக்கு அறிவுரை வழங்கி, பத்திரமாக வீட்டுக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், ரமேஷ் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்வதற்காக, அவர் மது அருந்தியதை உறுதி செய்யும் பரிசோதனை இயந்திரத்தை எடுக்க போலீசார் சென்றுள்ளனர்.

அப்போது காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற ரமேஷ், தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த விஷ மருந்தை அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவத்தில் பணியில் இருந்த காவலர்கள் சிவக்குமார் மற்றும் வேல்துரை ஆகிய இருவரும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகக் கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam