குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக டெல்டா விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூ
Nainar


Un


சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

குறுவை சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் ரூ.134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், இதுவரை ஒரு பைசா கூட விவசாயிகளின் கைக்கு வந்து சேரவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

குறுவை தொகுப்புத் திட்டத்திற்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கிவிட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். ஆனால், களநிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

இயந்திர நடவு ரசீது உள்ளிட்ட அனைத்து தேவையான ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பித்திருந்த போதிலும்,இதுவரை நிதியுதவி வழங்கப்படவில்லை என விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

குறுவை நெல் சாகுபடியின் அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இனியும் காகித அறிவிப்புகளை வெளியிட்டு காலம் கடத்தாமல், குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அறிவிக்கப்பட்ட நிதியுதவியை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ