ஆட்சியர் வர தாமதத்தால் விவசாயிகள் திடீர் தர்ணா – நேரில் வந்து சமரசம் செய்த கலெக்டர்
நெல்லை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தாமதமாக வந்ததால், அதிருப்தியடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில
விவசாயிகள் தர்ணா


நெல்லை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தாமதமாக வந்ததால், அதிருப்தியடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் 12 மணி வரை ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டரங்கிற்கு வராததால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.

இதையடுத்து அதிகாரிகளை கண்டித்து முழக்கமிட்ட விவசாயிகள், கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையையும் ஏற்க மறுத்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்த ஆட்சியர் ஆனந்த் மோகன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அதன்படி பிற கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும், அதிகாரிகள் கூட்டத்தை தொடங்கியிருப்பார்கள் என நினைத்து தாமதமாக வந்ததாகவும் விளக்கம் அளித்தார்.

மேலும், இனிவரும் காலங்களில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் உரிய நேரத்தில் வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து சமரசம் ஏற்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் கூட்டரங்கிற்கு சென்று குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P