Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
மாணவர்கள் மீது பெல்லட் கன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பெல்லட் கன் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர் சாஹில் லோச்சாப் உடன் டெல்லி பாராளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு நேரில் சென்றார்.
மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யும் வரை காவல் நிலையத்தை விட்டு வெளியேற முடியாது என ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஆனால், காவல்துறையினர் FIR பதிவு செய்ய மறுத்ததால், சாஹில் லோச்சாப் மற்றும் அவரது தாயாருடன் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் போராட்டத்தில் இணைந்து ராகுல் காந்திக்கு அருகில் அமர்ந்தார்.
இதனிடையே, மாணவர் போராட்டத்தின்போது காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அதிகப்படியான மற்றும் சமமற்ற வன்முறையை பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை (HPEC) அமைத்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
ஆனால், FIR பதிவு செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில், “நாங்கள் மாணவர்களுக்காக நிற்கிறோம். நீதிக்காக நிற்கிறோம். அமைதியாக இருக்க மாட்டோம். FIR பதிவு செய்யப்படும் வரை டிசிபி அலுவலகம் முன்பு தர்ணா” என பதிவிட்டது.
மேலும், ஜூலை 20-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சாஹில் லோச்சாப் மீது காவல்துறையினர் பெல்லட் கன் மூலம் தாக்குதல் நடத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மாணவர் போராட்டத்தின் போது பெல்லட் கன் பயன்படுத்த உத்தரவிட்டது யார் என்பது குறித்து FIR பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P